உலகின் மிக அதிக மதிப்பு கொண்ட முட்டை ஒன்று 273 கோடிக்கு ஏலத்தில் விற்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிசய முட்டை குறித்து பார்க்கலாம்.
கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி, லண்டனில் ஒரு ஏல நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலகின் பல பணக்காரர்கள் கலந்து கொண்டதால், நிகழ்ச்சியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த எதிர்பார்ப்புக்கு காரணம் நூற்றாண்டு பழமை கொண்ட “விண்டர் எக்” என்று அழைக்கப்படும் கலைப்பொருள் ஏலத்திற்கு வந்ததுதான். ஏலத்தில் விண்டர் எக் காட்சிப்படுத்தப்பட்டதும்,
அதை வாங்க செல்வந்தர்கள் முந்தி அடித்து, அதன் விலையை தொடர்ந்து உயர்த்தினர். இறுதியில், இந்த விண்டர் எக்கை ஒருவர் 22.9 மில்லியன் யூரோ, அதாவது இந்திய மதிப்பில் 273 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால் வாங்கியவரின் பெயர் குறித்து எந்த விவரமும் வெளிவரவில்லை.
ரஷ்ய புரட்சிக்கு முன்னர், ரஷ்யாவை ஆண்ட இரண்டாம் ஜார் நிக்கோலஸ் தனது தாயாருக்கு ஈஸ்டர் நிகழ்ச்சிக்காக அழகான பரிசு உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.
இதற்காக, அந்த காலத்தில் புகழ்பெற்ற நகை கலைஞர் பீட்டர் கால்ஃஏப் கேவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பீட்டர் கேவ் சுமார் 4,500 சிறிய வைரங்களை பயன்படுத்தி முட்டை வடிவில் ஒரு அற்புதமான கலைப்பொருளை உருவாக்கினார்.
மொத்தம் 30 வகை முட்டைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், “விண்டர் எக்” என்ற இந்த கலைப்பொருள் மட்டுமே மிக அதிக மதிப்புடையதாக விளங்கியது.
ரஷ்ய புரட்சிக்கு பின்னர் இந்த விலையுள்ள பொருள் காணாமல் போனது. பின்னர் 1980களில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முட்டை, முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு ஜெனிவாவில் ஏலத்தில் விற்கப்பட்டது.
அப்போது அதன் விலை 5.6 மில்லியன் அமெரிக்க டாலர். அதன் பிறகு, 2002-ல் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலத்தில் அப்போதைய கத்தார் இளவரசர் சவுத் பின் முகமத் அல்தானி இந்த முட்டையை 9.6 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். அவர் வைத்திருந்த பின்னர், தற்போது இந்த உலகின் விலை உயர்ந்த முட்டை வேறொருவருக்கு கைமாறியுள்ளது.








