உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கான தரவரிசை பட்டியல்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சர்வதேச அமைப்புகளால் வெளியிடப்படுகின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வலிமை, ராணுவ திறன், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உலக அரங்கில் அதன் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு செயல்படும் லோவி இன்ஸ்டிடியூட் குழு சமீபத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய சக்தி குறியீடு எனும் தலைப்பில் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, ஒரு நாட்டின் ஆதிக்கத்தை மதிப்பிடுவதற்காக பொருளாதாரம், ராணுவம், நிலைத்தன்மை, எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்புகள், ராஜதந்திர செல்வாக்கு மற்றும் கலாச்சார செல்வாக்கு என மொத்தம் எட்டு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த ஆசிய சக்தி குறியீட்டில் வல்லரசான அமெரிக்கா 80.5 புள்ளிகளுடன் தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அண்டை நாடான சீனா 73.7 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த குறியீட்டின் படி, இந்நாடுகள் இரண்டும் மிக சக்திவாய்ந்த நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 40 புள்ளிகளுடன், முந்தைய ஆண்டில் மூன்றாம் இடத்தை பெற்றிருந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி, இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா ஒரு முக்கிய சக்தி வாய்ந்த நாடாக உருவெடுத்ததோடு, முதல் முறையாக ஒட்டுமொத்தமாக 40 புள்ளிகள் என்ற உயர்வையும் கடந்துள்ளது.
இந்தியைக்கு அடுத்ததாக ஜப்பான் 38 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், ரஷ்யா 32.1 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன. இந்நாடுகள் நடுத்தர சக்தி வாய்ந்த நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உலகின் முக்கிய சக்தி வாய்ந்த நாடாக இந்தியா முன்னேற்றம் காண காரணிகள் பல உள்ளன என லோவி இன்ஸ்டிடியூட் தெரிவிக்கிறது. நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான பொருளாதார திட்டமிடல் ஆகியவை உலக அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உயர்த்தியுள்ளது.
மேலும் அதிகரித்த ராணுவ திறனும், குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர்க்கு பிறகு இந்தியாவின் ராணுவத் திறன் மற்றும் திட்டமிடலுக்கும் அதிக மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் ராஜதந்திர செல்வாக்கும், அரசியல் முக்கியத்துவமும் இந்த முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளன. எனினும் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றிருந்தாலும், இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சக்தி மதிப்பெண் வித்தியாசம் மிக அதிகமாக உள்ளது.
இதனால், ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் வலிமைமிக்க நாடாக சீனா தன்னிடம் உள்ள நிலையை தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளது.








