தாய்லாந்தின் பேங்காக் நகரில் நடைபெற்று வரும் மிஸ் யுனிவர்ஸ் 2025 சர்வதேச அழகிப்போட்டியின் முன்னோட்ட சுற்றில் ஜமைக்காவின் பிரதிநிதி கேப்ரியல் ஹென்ரி மேடையில் தவறி விழுந்த சம்பவம் தற்போது காணொளியாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 19, 2025 அன்று நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கு முன்னதாக நடந்த முன்னோட்ட சுற்றில், மாலை கவுன் பிரிவில் ராம்ப்வாக் செய்து கொண்டிருந்த மிஸ் ஜமைக்கா பட்டதாரி கேப்ரியல் ஹென்ரி, மேடையின் விளிம்பில் கால் தவறி கீழே விழுந்தார். சம்பவத்தின் அதிர்ச்சிகரமான காணொளி வெளியாகியுள்ள நிலையில், அவர் உடனடியாக சிகிச்சைக்காக பேங்காக்கில் உள்ள பாவலோ ரங்சிட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பேங்காக்கில் நடைபெற்று வரும் மிஸ் யூனிவர்ஸ் போட்டி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, டாக்டர் கேப்ரியல் ஹென்ரி நலமாக உள்ளார் என்றும், உயிருக்கு ஆபத்தான எந்தக் காயமும் அவருக்கு இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
மிஸ் யூனிவர்ஸ் அமைப்பின் தலைவர் ரவூல் ரோஜா, ஹென்ரிக்கு எலும்பு முறிவுகள் எதுவும் இல்லை என்றும், அவர் மருத்துவமனையில் சிறப்பான கவனிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் இருப்பார் எனவும், முழுமையாக குணமடைவதை உறுதி செய்ய கூடுதல் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. ஜமைக்காவின் பிரதிநிதியான கேப்ரியல் ஹென்ரி ஒரு கண் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எதிர்பாராத நிகழ்வுக்குப் பிறகு, ரசிகர்கள் மற்றும் அழகிப்போட்டி ஆர்வலர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இறுதி போட்டிக்கு முன்னதாக அவர் மீண்டு வந்து போட்டியில் பங்கேற்பாரா என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.








