பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு அதிநவீன போர் கப்பலை கடற்படையில் இணைத்து உலக நாடுகளை அதிரவைத்துள்ளது சீனா. இந்த கப்பலில் உள்ள சிறப்பு அம்சங்களே உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
சமீப காலமாக சீனா தொடர்ந்து தனது ராணுவ திறன்களை பலப்படுத்தி வருகிறது. குறிப்பாக வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழி ராணுவப் பிரிவுகளை விரிவுபடுத்தி வந்த சீனா, தற்போது தனது கடற்படையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
சீனாவிடம் தற்போது “லியோனிங்” மற்றும் “ஷான்டாங்” எனும் இரண்டு விமானம் தாங்கி போர் கப்பல்கள் உள்ளன. இவற்றுக்கு அடுத்ததாக, “புஜியன் (Fujian)” எனும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மூன்றாவது விமானம் தாங்கி போர் கப்பலை பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தனது கடற்படையில் இணைத்துள்ளது.
இந்த போர் கப்பலின் முதல் கடல் சோதனை 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றது. தற்போது அது அதிகாரப்பூர்வமாக கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னர் சீனாவிடம் உள்ள லியோனிங் மற்றும் ஷான்டாங் போர் கப்பல்களில் “ஸ்கி-ஜம்ப் (Ski-jump)” முறையில் விமானங்கள் ஏவப்படுகின்றன. ஆனால் புதிய புஜியன் போர்க்கப்பலில் மின்காந்த உந்துவிசை (Electromagnetic Catapult) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானங்களையும் ஏவுகணைகளையும் வேகமாகவும் துல்லியமாகவும் ஏவ முடியும்.
மேலும், இந்த புஜியன் போர் கப்பல், சீனாவிடம் ஏற்கனவே உள்ள இரண்டு போர்கப்பல்களை விட மிகப் பெரியது. திறனிலும், தொழில்நுட்பத்திலும் இது அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்கப்பல்களுக்கு நிகராக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








