Home உலகம் ”பூமிக்கடியில் பதுங்கிய நெருப்பு பிசாசு வெளிப்படைந்தது”!

”பூமிக்கடியில் பதுங்கிய நெருப்பு பிசாசு வெளிப்படைந்தது”!

10 ஆயிரம் ஆண்டுகளாக பூமிக்கடியில் பதுங்கி இருந்த நெருப்பு பிசாசுபோல், எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை ஆக்ரோஷமாக வெடித்துள்ளது. வெடிப்பின் தாக்கமாக 14 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பல் மேகங்கள் வானில் எழுந்துள்ளன.

ஆகாயத்தை இருட்டடித்த அந்த சாம்பல் மேகங்கள் பாகிஸ்தான், ஓமன் நாடுகளைத் தாண்டி வட இந்தியா வரை நகர்ந்துள்ளன. சில இடங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எத்தியோப்பியாவில் வெடித்த இந்த எரிமலை பற்றிய செய்தியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஹேலி குப்பி எரிமலை வெடிப்பால் உருவான சாம்பல் மேகங்கள் காற்றின் வேகத்தில் இந்தியாவின் வான்வெளி வரையிலும் வந்தடைந்துள்ளன. இதையடுத்து இந்திய விமான போக்குவரத்து துறையின் இயக்குநரகம் அனைத்து விமானிகளுக்கும் அவசர எச்சரிக்கை அறிவிப்பு பிறப்பித்துள்ளது.

அந்த எரிமலை சாம்பலில் கண்ணாடி போல கூர்மையான சிலிகேட் துகள்கள் உள்ளன; அவை விமான எஞ்சினில் புகுந்தால் உள்ளிருக்கும் உதிரிப் பாகங்களை சிதைத்து, சில நேரங்களில் எஞ்சினையே அணைக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதனால், சாம்பல் பரவியுள்ள வான்பகுதிகளை, குறிப்பிட்ட உயரங்களில், விமானங்கள் தவிர்த்து செல்லும் விதமாக மாற்றி இயக்கப்படுகின்றன. எத்தியோப்பியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்தது. அதன் புகை, சாம்பல் மேகங்கள் திங்கட்கிழமை காலை 5 மணிக்குள் பரவி பல்வேறு நாடுகளை நோக்கி நகரத் தொடங்கின.

அதேநாள் இரவு 11 மணியளவில் அந்த மேகங்கள் இந்தியாவின் வடமேற்கு வான்வெளியை கடந்தன. பின்னர் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முழுவதும் பரவின.

சாம்பல் மேகம் 10 கிலோமீட்டர் உயரத்திற்கு மேல் இருப்பதால், டெல்லி போன்ற நகரங்களின் தரைமட்ட காற்றுத் தரத்தில் பெரிதாக பாதிப்பு இருக்காது என்றும், இந்த தாக்கம் சில மணி நேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்றும், மேகம் வேகமாக கிழக்குத் திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.