மலாக்கா நீரிணையில் 135 ஆண்டுகளுக்கு பிறகு உருவான புயல் வானிலை ஆய்வாளர்களை ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயற்கையின் அதிசயமாக பார்க்கப்படும் இந்த நிகழ்வு.
கடந்த நவம்பர் 25 ஆம் தேதி மலாக்கா நீரிணையில் உருவான செம்மியார் புயல், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா, தென் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்த புயலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
இந்த பாதிப்புகளைத் தாண்டி, செம்மியார் புயல் உருவான காரணத்தால் இது ஒரு பெரும் வரலாற்று நிகழ்வாகும். மலேசியா மற்றும் சுமத்திரா தீவுக்கு இடையில் அமைந்த மலாக்கா நீரிணை, இந்திய பெருங்கடலின் ஒரு பகுதியான அந்தமான் கடலையும் பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான தென்சீன கடலையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைந்துள்ளது.
பொதுவாக, கோரியோசில் விசை மற்றும் காற்றின் சுழற்சி காரணமாக பூமத்திய ரேகைக்கு அருகில் பெரும்பாலும் புயல் உருவாகாது.
இதன் காரணமாக, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள மலாக்கா நீரிணை பெரும்பாலும் புயல் உருவாகாத பகுதியாகக் கருதப்பட்டு வந்தது.
கடைசியாக 135 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான புயலே இந்த பகுதியில் உருவான கடைசி புயலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், கடந்த நவம்பர் 22 ஆம் தேதி, இந்த பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அப்போது கூட, இது புயலாக மாற வாய்ப்பு இல்லையே என்று வானிலை ஆய்வாளர்கள் கருதினார்கள்.
ஆனால் அந்த கணிப்பை மீறி, அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவானது. இதன் மூலம், கடந்த 100 ஆண்டுகளில் மலாக்கா நீரினையில் உருவான புயலாக செம்மியார் புயல் வரலாற்று நிகழ்வாக பதிவு செய்யப்பட்டது.
செம்மியார் புயல் வடக்கு சுமத்திராவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. சாதகமற்ற வானிலை சூழல் காரணமாக ஒரே நாளில் பல இடங்களில் கனமழை பெய்தது.
அதன் பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மலேசியாவையும் தாக்கி, அங்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி, இறுதியாக தென்சீன கடலுக்குச் சென்று மறைந்தது.
இதற்கு முன்னர், 2002 ஆம் ஆண்டு உருவான பாமை புயல் இதே பகுதிகளை தாக்கியது என்றாலும், அது மலாக்கா நீரிணையில் உருவாகாமல் தென்சீன கடலில் உருவானது குறிப்பிடத்தக்கது. இதனால், செம்மியார் புயல் ஒரு இயற்கை அதிசயமாக பார்க்கப்படுகிறது.








