ஐரோப்பாவில் விந்தணு தானம் செய்த ஒரு மாணவரின் விந்தணு காரணமாக பிறந்த சுமார் 200 குழந்தைகள் புற்றுநோய் அபாயத்தில் சிக்கியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2005 முதல் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள விந்து வங்கியில் சேமிக்கப்பட்ட விந்தணு, 14 நாடுகளில் உள்ள 67 மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு, சுமார் 197 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
பின்னர், இந்த விந்தணுவில் Li-Fraumeni Syndrome எனப்படும் அரிய மரபணு குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது p53 மரபணுவை பாதிப்பதால் சிறு வயதிலேயே புற்றுநோய் வரக்கூடிய அபாயம் மிக அதிகம்.
ஏற்கனவே 10 குழந்தைகளுக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள குழந்தைகளுக்கும் அபாயம் எப்போது தோன்றும் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
2023ல் நடந்த விசாரணையில் தானம் செய்தவர் டென்மார்க்கை சேர்ந்த மாணவர் என்பது உறுதியானது. பின்னர் அவரின் விந்தணு நீக்கப்பட்டு, தானம் செய்யத் தடை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம், குழந்தையின்மை சிகிச்சைக்காக விந்தணு அல்லது கருமுட்டை தானம் பெறும் தம்பதிகள், டோனரின் குடும்ப வரலாறு, உடல்நிலை மற்றும் மரபணு பரிசோதனைகள் ஆகியவற்றை மிகவும் கவனமாகச் சரிபார்க்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
மருத்துவ நிபுணர்கள், ஒரு டோனரின் விந்தணுவை அதிக குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், மரபணு பரிசோதனைகள் கட்டாயம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர்.








