அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றியதாக வெள்ளை மாளிகை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதற்காக அவருக்கு நோபல் அமைதி பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கரோலின் லீவிட், டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் உட்படப் பல நாடுகளிடையே அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
டிரம்ப் தனது பதவிக்காலத்தில் மாதம் சராசரியாக ஒரு அமைதி ஒப்பந்தம் அல்லது போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும், தாய்லாந்து-கம்போடியா, இஸ்ரேல்-ஈரான், செர்பியா-கொசோவோ போன்ற நாடுகளுக்கு இடையே அவர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்தார் என்றும் லீவிட் கூறினார்.
தாய்லாந்து-கம்போடியா மோதலில் ட்ரம்ப் தலையிட்டு நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு வழிவகுத்ததாகவும், இதன் மூலம் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வதை தடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தியா தரப்பில், இந்த போர்நிறுத்தத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் தலையீடும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் டைரக்டர் ஜெனரல் ஆஃப் மிலிட்டரி ஆபரேஷன்ஸ் (DGMO) தனது இந்தியப் counterpartஐத் தொடர்புகொண்டு அமைதி முன்மொழிவைச் சமர்ப்பித்த பிறகே போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது என்று இந்தியா சுட்டிக்காட்டியது.








