மனித உரிமை மீறல் வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், “என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறேன்” என அவரின் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கலவரத்தில் பலர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி எனத் தீர்மானித்து மரண தண்டனை வழங்கியுள்ளது.
இது குறித்து ஷேக் ஹசீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுப்பதோடு, நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தற்போதைய முகமது யூனுஸ் தலைமையிலான அரசாங்கம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, தமக்கு எதிரான இந்த தீர்ப்பு ஜனநாயக ஆதரவு இல்லாத, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால் நிறுவப்பட்டு நடத்தப்படும் “மோசடியான” தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
தமக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு பாரபட்சமானதோடு அரசியல் ரீதியாக உந்தப்பட்டதாகவும், வங்கதேசத்தின் கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகிய தன்னை அரசியல் அரங்கில் இருந்து நீக்கவும், அவாமி லீக் கட்சியை பலவீனப்படுத்தவும் இடைக்கால அரசில் உள்ள தீவிரவாத சக்திகள் நாடும் திட்டத்தையே இந்த தீர்ப்பு வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதாகவும், கடந்த ஆண்டு ஜூலை–ஆகஸ்ட் மாதங்களில் அரசியல் பிரிவுகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களில் உயிரிழந்த அனைவரின் மரணத்துக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தானோ அல்லது தன் கட்சியைச் சார்ந்த எந்தத் தலைவர்களோ போராட்டக்காரர்களை தாக்க உத்தரவிட்டதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“நீதிமன்றத்தில் என்னை பாதுகாக்க நியாயமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. என் விருப்பப்படி வழக்கறிஞர்களை நியமிக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. எனக்கு எதிரான இன்றைய தீர்ப்பு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று” என அவர் கூறியுள்ளார்.
மேலும், மத சிறுபான்மையினர், பழங்குடியினர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிறருக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளில் பிற கட்சி உறுப்பினர்கள் தொடர்புடையதாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களை விசாரிக்கவோ தண்டிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“இந்த சர்வதேச நீதிமன்றத்தால் நான் விடுவிக்கப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இடைக்கால அரசை பலமுறை கேட்டும், அவர்கள் இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவில்லை; ஏனெனில் நான் விடுவிக்கப்படுவேன் என்பதையே அவர்கள் பயந்தனர்” என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
அத்துடன், “எனக்கு எதிரான குற்றவியல் தீர்ப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. நீதிமன்றத்தில் எனது தரப்புக்கு நியாயம் கூறுவதற்கான வாய்ப்பே வழங்கப்படவில்லை. டாக்டர் யூனுஸ் அரசியலமைப்பிற்கு விரோதமாகவும் தீவிரவாத சக்திகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தார்” என அவர் கூறியுள்ளார்.








