ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் பண்டிகை கால தள்ளுபடியால் கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மாருதி நிறுவனம் ஒரே நாளில் 25000 கார்களை விற்று உள்ளது.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தில் கார்கள் மீதான ஜிஎஸ்டி 28%த்தில் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டது. இதனால் Maruti Suzuki, Tata Motorsஸ், Mahindra, Hyundai, Toyota உள்ளிட்ட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், 1,200 திறனுக்கு குறைவான கார்களின் விலையை குறைத்துள்ளன.
இதோடு சேர்த்து பண்டிகை கால சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் கார் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. திருத்தப்பட்ட ஜிஎஸ்டி அமலான முதல் நாளே சுமார் 25,000 கார்கள் விற்பனையாகி உள்ளதாக மாருதிசுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார்களின் விலை குறைக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு நாளும் சுமார் 15,000 முன்பதிவுகள் வருவதாகவும் இது சராசரியை விட 50% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18ஆம் தேதிக்கு பிறகு சுமார் 75,000 கார்களை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு நாள் விற்பனை நேற்று உயர்ந்துள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு சுமார் 80,000 பேர் கார்கள் தொடர்பாக விசாரிப்பதாகவும் சில மாடல் கார்கள் முழுமையாக விற்று தீர்ந்துவிட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் விலை குறைக்கப்பட்ட பின்னர் சென்னையில் மட்டும் சுமார் 2,000 கார்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே மற்றொரு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில் ஒரே நாளில் 11,000 கார்களை டெலிவரி கொடுத்துள்ளது. ஜிஎஸ்டி சீர் திருத்தத்திற்கு பின்னர் சிறிய வகை கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிகிறது.








