Home தமிழகம் கரூர் துயர சம்பவம்: “குறைந்தபட்ச சமூக பொறுப்பே இல்லை” – நீதிமன்றம் கடும் கண்டனம்

கரூர் துயர சம்பவம்: “குறைந்தபட்ச சமூக பொறுப்பே இல்லை” – நீதிமன்றம் கடும் கண்டனம்

கடும் கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தையும் அதன் தலைவர் விஜயையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக சாடியுள்ளனர்.

கரூரில் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்தபோது, “இது ஒரு கட்சியின் கூட்டமா, அல்லது கல்லூரி விழாவா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், “தொண்டர்களையும், குழந்தைகளையும் காப்பாற்றாமல் தலைவர் விஜய் மட்டும் வெளியேறியுள்ளார்; இது கண்டிக்கத்தக்கது” என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

ஹிட் அண்ட் ரன் வழக்கு போல பதிவு செய்து, விஜயின் பிரச்சார பேருந்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை என நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பினார்.

41 பேர் உயிரிழந்த நேரத்தில், பிற கட்சியினர் உதவிக்கு விரைந்தபோது, தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் காணாமல் போனது ஏன் எனவும் அவர் சாடினார்.

“கரூர் விபத்து மனிதனால் உண்டான பேரழிவு. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களுக்கு துளியும் கருணை காட்ட முடியாது” என்று நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.

அத்துடன், சமூக வலைத்தளங்களில் பொருத்தமற்ற வகையில் கருத்து பதிவிட்ட ஆதவனை ஏன் கைது செய்யவில்லை எனவும், அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

“ஒரு அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச சமூக பொறுப்பே தமிழக வெற்றி கழகத்திடம் இல்லை” என நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.