பூமியின் வளிமண்டலத்தை பாதிக்கும் அளவிற்கு சக்திவாய்ந்த ஒரு புவி காந்தப் புயல் உருவாகியுள்ளது. இதனால் பூமியைச் சுற்றி இயங்கும் செயற்கைக் கோள்கள் மற்றும் மின்சார கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதால், அதிகாரிகள் எச்சரிக்கை நிலையில் உள்ளனர்.
இது தீவிரமான சூரியப் புயல் — அதாவது சோலார் ஸ்டார்ம் — என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியன் சூரிய குடும்பத்தின் மையமாக இருந்து, அதன் கதிர்வீச்சுதான் பூமியில் உயிர்களின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாகும். ஆனால் அந்த சூரியனில் ஏற்படும் மாறுபாடுகள் நேரடியாக பூமியையும் பாதிக்கக்கூடியவை.
சமீபத்தில் ஏற்பட்ட சூரியப் புயல் அதற்குச் சிறந்த உதாரணமாகக் கூறப்படுகிறது. நவம்பர் 11 ஆம் தேதி சூரியனில் இரண்டு கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் (CME) ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஒரு G4 வகை புவி காந்தப் புயல் உருவானது.
இதன் விளைவாக, ஆற்றல் நிறைந்த துகள்கள் பூமியை நோக்கி வீசப்பட்டன. இதனால் புளோரிடா, டெக்சாஸ், அலபாமா போன்ற தெற்கு மாநிலங்களிலும் அரிதாகக் காணப்படும் அரோரா ஒளிகள் (Aurora Lights) தோன்றின.
சூரியனின் AR 4274 எனும் புள்ளியிலிருந்து வெடித்த சக்திவாய்ந்த சூரிய ஒளிக்கற்றை, அதிக ஆற்றல் கொண்ட புரோட்டான்களை வெளியிட்டது. அவற்றில் சில பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தன.
பேராசிரியர் கிளைவ் டயர் கூறியதாவது: “இது ஒரு அபூர்வமான நிகழ்வு. காஸ்மிக் கதிர்வீச்சு திடீரென அதிகரித்துள்ளது,” என்றார்.இதை உலகம் முழுவதும் உள்ள நியூட்ரான் கண்காணிப்பு மையங்கள் பதிவு செய்துள்ளன என்றும் அவர் கூறினார். இத்தகைய புயல்கள் மிகவும் அரிதாக, ஒரு சூரியச் சுழற்சியில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கடுமையான புவி காந்தப் புயல்கள் வானொலி தொடர்பு, GPS, விமான போக்குவரத்து மற்றும் மின்சார வலையமைப்புகள் ஆகியவற்றுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.








