டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த இந்திய அணி, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அணியில் இளம் வீரர்களுக்கும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கும், சமநிலையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், ஹார்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் பட்டேல் போன்ற அனுபவம் மிக்க வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். துணைக் கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஈஷான் கிஷன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமீப காலங்களில் தொடர்ச்சியான செயல்பாடுகளின் அடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சுத் துறையில் ஜஸ்பிரித் பும்ரா, அற்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியின் முக்கிய பலமாக பார்க்கப்படுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்.
கடந்த சில தொடர்களில் அணியில் இடம் பெற்றிருந்த சுப்மன் கில், இந்த முறையிலான டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை. இது தேர்வுக் குழுவின் அணிசேர்க்கை மற்றும் சமநிலை தொடர்பான முடிவாக பார்க்கப்படுகிறது.
இந்த 15 பேர் கொண்ட இந்திய அணி, டி20 உலகக் கோப்பையுடன் சேர்த்து வரவிருக்கும் டி20 சர்வதேச தொடர்களிலும் பங்கேற்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணி, உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு வலுவான செயல்பாட்டை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








