200 கோடி ஆண்டுகள் பழமையானது. இமயமலையை விடவும் வயதானது ஆரவல்லி மலைத் தொடர். இருப்பினும், இன்று இந்தியாவின் ஆரவல்லி மலைத்தொடர் தனது உயிர்மூச்சுக்காக போராடிக்கொண்டிருக்கிறது.
ஆரவல்லி குறித்த உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு, தேசிய அளவிலான எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது. ஆரவல்லி ஏன் திடீரென இவ்வளவு சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது?
ஆரவல்லி என்றால் என்ன?
நீங்கள் 200 கோடி ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தால், இந்திய நிலப்பரப்பை வரையறுக்கும் முதல் அடையாளமாக இமயமலை இருக்காது. ஆரவல்லி மலைத் தொடர்தான் இருக்கும்.
குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை 692 கி.மீ நீளத்திற்கு பரவியுள்ள ஆரவல்லி மலைத் தொடர், பூமியின் பழமையான மலை அமைப்புகளில் ஒன்றாகும்.
ஆரவல்லி ஏன் முக்கியமானது?
ஆரவல்லி என்பது வெறும் குன்றுகள் மட்டுமல்ல. அவை இயற்கையான உயிர்காக்கும் அமைப்புகள். தார் பாலைவனம் கிழக்கு நோக்கி நகர்ந்து வளமான இந்தோ-கங்கை சமவெளிக்குள் நுழைவதைத் தடுக்கும் சுவராக இவை செயல்படுகின்றன.
இவை நிலத்தடி நீரை புதுப்பிக்கின்றன. ஒரு ஹெக்டேருக்கு 20 லட்சம் லிட்டர் நீரை சேமிக்கும் திறன் கொண்ட நிலத்தடி நீர் அடுக்குகளை இவை ஊட்டி வளர்க்கின்றன.
சம்பல், சபர்மதி மற்றும் லூனி போன்ற ஆறுகள் இங்குதான் பிறக்கின்றன. மேலும், இந்த மலைத் தொடர்கள் வட இந்தியாவின் பசுமை நுரையீரல் போல செயல்பட்டு, குறிப்பாக டெல்லி பகுதியில் தூசிப் புயல்களை குறைத்து மாசுபாட்டை கட்டுப்படுத்துகின்றன.
ஆரவல்லியை அகற்றிவிட்டால், வட இந்தியா வெப்பமடைவது மட்டுமல்லாமல் வரண்டு போவதோடு, மூச்சுத்திணறலையும் சந்திக்கும் என சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
சர்ச்சை என்ன?
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புதான் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. சுரங்க ஒழுங்குமுறைகளில் உள்ள குழப்பத்தைத் தீர்க்க, நீதிமன்றம் ஒரு பொதுவான வரையறையை ஏற்றுக்கொண்டது.
உள்ளூர் நிலப்பரப்பை விட 100 மீட்டர் அல்லது அதற்கும் அதிக உயரம் கொண்ட நிலப்பகுதிகள் மட்டுமே சட்டப்பூர்வமாக ஆரவல்லி குன்றுகள் என்று கருதப்படும்.
இந்த ஒரு வரி அனைத்தையும் மாற்றிவிடும் என சூழலியல் அமைப்புகள் கூறுகின்றன. சில மதிப்பீடுகளின் படி, ஆரவல்லி நிலப்பரப்பில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானவை உயரம் குறைந்த குன்றுகளை கொண்டவை. அவை இப்போது பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளன.
இது ஏன் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது?
சுற்றுச்சூழல் விதிகளின் தளர்வு பெரும் சுரங்க நிறுவனங்களுக்கே பயனளிக்கும் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்தியாவின் வளர்ச்சி மாதிரி என்பது இயற்கை வளங்களை ஒரு சிலருக்கு மட்டுமே திறந்துவிடும் வகையில் அதிக அளவில் மையப்படுத்தப்படுகிறதா என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதைக் கடுமையாக மறுக்கும் அரசாங்கம், ஆரவல்லியின் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான பகுதி பாதுகாப்பாகவே இருப்பதாகவும், சுரங்கத் தொழிலுக்கான தகுதி 0.19 விழுக்காடு பகுதிக்கு மட்டுமே உள்ளதாகவும் கூறுகிறது.
ஆரவல்லி மலைத் தொடர் பழமையானதாக இருக்கலாம். ஆனால் அது எழுப்பும் கேள்விகள் தற்காலத்தைச் சேர்ந்தவை மற்றும் அவசரமானவை. வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் சூழலியல் எல்லைகள் பற்றியவை.
இது ஒரு நிலையான ஒழுங்குமுறையா, அல்லது வரையறைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒரு மெதுவான அழிவா? இப்போதைக்கு மலைகள் காத்திருக்கின்றன. நாடு கவனித்துக் கொண்டிருக்கிறது.








