Home திரையுலகம் 21 கோடி கடன் சர்ச்சை… கார்த்தி படம் மீது சென்னை உயர்நீதிமன்றம் தடை!

21 கோடி கடன் சர்ச்சை… கார்த்தி படம் மீது சென்னை உயர்நீதிமன்றம் தடை!

நடிகர் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் நான்கு நாளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் அவர்கள் 2014ஆம் ஆண்டு திவாலானவர் என அறிவிக்கப்பட்டு, அவருடைய சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சியர் நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸிடமிருந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் 10 கோடி 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது; அந்த தொகை வட்டியுடன் சேர்ந்து தற்போது 21 கோடி 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

அந்த தொகையை ஞானவேல் ராஜா செலுத்த வேண்டும் என்றும், அவர் தயாரித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடைவிதிக்கவும், திரைப்படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட தற்காலிக தடையை விதித்து, ஞானவேல் ராஜா இப்போது கடன் தொகையை எவ்வாறு செலுத்தப் போகிறார் என்பதற்கான பதிலை அளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் பி. குமரப்பன் ஆகியோரின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்தாட்சியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் பல முறை வாய்ப்பு அளித்தும் ஞானவேல் ராஜா கடனை திருப்பி அளிக்கவில்லை; எனவே அவர் சொத்துக்களை முடக்க வேண்டும் என வாதிட்டார்.

ஞானவேல் ராஜா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 3 கோடி 75 லட்சம் ரூபாயை 24 மணி நேரத்தில் செலுத்துவதாகவும், மீதமுள்ள தொகைக்கான கொடுப்பனவு ஆவணங்களை தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், வா வாத்தியார் திரைப்பட வெளியீடு தடை செய்யப்பட்டால், தங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் கூறினார்.

இதனை பரிசீலித்த நீதிபதிகள், நீதிமன்றம் ஏற்கனவே பல வாய்ப்புகள் வழங்கிய நிலையில், மேலும் வாய்ப்பு அளிக்க தேவையில்லை என்றும், பணம் கொடுத்தவர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ஞானவேல் ராஜா எந்தவித தீவிர முயற்சியும் செய்யவில்லை; வழங்கப்பட்ட நேரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

எனவே, கடன் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை எந்த தளத்திலும் வெளியிடக்கூடாது என தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.