இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள இமயமலை பிராந்தியம் லடாக் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இமயமலை மற்றும் காரகோரம் மலைத்தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த பிராந்தியத்தின் ஆக பெரும்பாலான பகுதி குளிர் பாலைவன பகுதி என்பது மிகச்சிலருக்கே தெரியும்.
-48 டிகிரி வரை செல்லக்கூடிய லடாக்கின் குளிர் உரைய வைக்கக்கூடியது. 10ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை ஒரு சுதந்திரமான பௌத்த ராஜ்ஜியமாக விளங்கியது லடாக். 1834ல் ஜம்முவின் டோக்ரா அரசரிடம் அடைந்த தோல்வியின் விளைவாகத்தான் ஜம்மு காஷ்மீரோடு அரசியல் ரீதியான அதன்
இணைப்பு தெடங்கியது.
லடாக்கின் வரலாற்றில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் இது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் ஒரு பகுதியாக லடாக் இல்லை. சுதந்திரத்துக்கு பின் ஜம்மு காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டபோது அதன் பகுதியாக இருந்த லடாக்கும் இந்திய ஒன்றியத்தின் பகுதியாக இணைக்கப்பட்டது.
ஜம்மு, காஷ்மீர், லடாக் இந்த மூன்று பிராந்தியங்களின் அரசியலை புரிந்து கொள்ள இங்குள்ள மக்களின் பின்புலத்தை அறிந்து கொள்ளுதல் முக்கியமாகும். ஜம்மு பிராந்தியம் இந்துக்களும் காஷ்மீர் பிராந்தியம் முஸ்லிம்களும் பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்தும் பிராந்தியங்களாகும்.
மாறாக லடாக் பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியம். ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் 87 இடங்களில் லடாக்குக்கு வெறும் நான்கு இடங்களே இருந்தன. ஆகையால் எப்போதும் புறக்கணிக்கப்பட்டது லடாக். இத்தக பின்னணியில் தான் 2019ல் மோடி அரசு ஜம்மு காஷ்மீரில்லிருந்து பிரித்த லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்ததை லடாக் மக்கள் வரவேற்றனர்.
லடாக், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு இது முக்கியமான பகுதியாகும். இந்திய ராணுவ தளங்கள் இங்கு அதிக அளவில் உள்ளன. ராணுவம் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்காக கடும் பனிப்பொழிவிலும் சாலை இணைப்பை உறுதி செய்ய பெரும் உட்கட்டமைப்பு திட்டங்கள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
பாரம்பரியமாக பார்லி மற்றும் கோதுமை சார்ந்த விவசாயமே இங்கு பிரதான வேளான் தொழிலாக இருந்து வருகிறது. ஆடு மேய்க்கும் சமூகத்தினர் பஷ்மினா ஆட்டு முடி மற்றும் கம்பளி வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். மற்றபடி சுற்றலாவை தவிர இங்குள்ள மக்களுக்கு வேறு வேலை வாய்ப்புகள் இல்லை.
நவம்பர் மாதம் முதல் மார்ச் வரை வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குளிர் சூழலில் உள்ள லடாக் மக்களின் தேவைகள் அதிகம். ஆனால் இந்திய அரசு ராணுவ ரீதியாக இந்த பிராந்தியத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பொதுமக்கள் வாழ்க்கைக்கு தருவதில்லை என்ற குற்றச்சாட்டு லடாக் மக்களிடம் உள்ளது.
அதேபோல சுற்றுச்சூழலை பொருட்படுத்தாமல் பல பெருந்ததிட்டங்களை இந்திய அரசு சிந்திப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகு பின்னணியிலேயே லடாக் மக்களின் போராட்டம் பேசு பொருளாகி உள்ளது.








