நீலகிரி மாவட்டம் உதகையில் புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியதுபோல் உறைபனி காணப்பட்டு, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக உறைபனி சீசன் நேற்று முதல் தொடங்கி, இன்று சிறிது அதிகமாக காலதாமதமாக ஆரம்பித்துள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி மாத இறுதி வரை பனிக்காலம் நிலவும். குறிப்பாக நவம்பர் மாத தொடக்கத்தில் பனித்துளிகள் ஆரம்பித்து, படிப்படியாக உறைபனி பொலிவு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு பனிப்பொழிவு காலதாமதமாக தொடங்கியுள்ளது.
பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை உதகை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், குறிப்பாக குதிரை பந்தய மைதானம், விவசாய நிலங்கள், புல்வெளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உறைபனி பொலிவு காணப்பட்டது.
மேலும், வெட்டவெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மேல் உறைபனி படர்ந்திருப்பதை கண்டு, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கைகளில் எடுத்து மகிழ்ந்தனர்.
உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி, உதகைக்கு வருகை புரிந்துள்ள சுற்றுலா பயணிகளும் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, குப்பைகளை தீயிட்டு குளிர்காய்ந்து தங்களை பாதுகாத்துக் கொண்டு வருகின்றனர்.
உதகையில் நிலவும் கடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.








