23வது இந்தியா–ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் டிசம்பர் 4ஆம் தேதி மாலை இந்தியா வந்தார். விமான நிலையத்திற்கே நேரில் சென்று அவரை வரவேற்ற பிரதமர் மோடி, நேற்று தனது இல்லத்தில் புட்டினுக்கு விருந்து அளித்தார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள புட்டினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளும், அவர் பயன்படுத்தும் குண்டு துளைக்காத காரும் தொடர்பான செய்திகள் தற்போது மொத்த இணையத்தையும் ஆக்கிரமித்து வருகின்றன.
இந்நிலையில், அதிபர் புட்டின் விரும்பி சாப்பிடும் உணவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புட்டின் தனது நண்பர்கள் காலை உணவை முடித்த பின் தான் காலை உணவை அருந்துவார்.
பாலாடை கட்டி, கஞ்சி, ஆம்லெட், காடை முட்டைகள், பழச்சாறு — இவையே அவரது வழக்கமான காலை உணவு. சில வேளைகளில் பாலாடை கட்டியுடன் தேன் அல்லது கஞ்சியை சேர்த்து சாப்பிடுவாராம்.
எப்போதாவது அரிசி உணவுகளும் இடம்பெறும். ஆனால் பதப்படுத்தப்பட்ட (processed) உணவுகளை அவர் ஒருபோதும் உண்பதில்லை. இதற்கு மேலாக சாலமன் மீன், ஆட்டிறைச்சி, முட்டைக்கோஸ், சாலட்கள், தக்காளி, லெட்டூஸ் இலைகள் ஆகியவை எப்போதும் அவரது உணவில் இடம் பெறுகின்றன.
இதற்குப் பிறகு, புட்டினுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடித்தது. அதிலும் பிஸ்தா ஃப்ளேவர் என்றால் விரும்பி சாப்பிடுவாராம். புட்டினுக்கு வழங்கப்படும் உணவுகளுடன் தவறாமல் ஐஸ்கிரீமும் சேர்க்கப்படும் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.








