திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்தார். உயிரிழந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த 3 லட்சம் ரூபாய் நிதி உதவி போதாது; குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர். கே.பேட்டை அருகே அம்மநேரி ஊராட்சி கொண்டாபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவரின் மகன் மோகித் ஏழாம் வகுப்பில் படித்து வந்தார்.
நேற்று பிற்பகல் மதியம், மதிய உணவு இடைவேலையின் போது, மோகித் பள்ளியில் கைப்பிடிச் சுவர் அருகே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென சுவர் இடிந்து மோகித் மேல் விழுந்தது.
சம்பவ இடத்திலேயே மாணவர் உயிரிழந்தார். அவரது உடலை திருத்தணி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக திருத்தணி அரசு மருத்துவமனையில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் (MLA) சந்திரன் மாணவனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து குடும்பத்துடன் சந்தித்து விசாரிக்க வேண்டும், மாணவன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி, சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதால், நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவமான பள்ளியில் உயர்நிலை மற்றும் தொடக்க பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சமரசம் இல்லாததால், உறவினர்கள் மற்றும் பெற்றோர் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு, சடலத்தை வாங்க மறுக்கின்றனர்.








