Home தமிழகம் “சென்னைவாசிகளே கவனம்! மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்”

“சென்னைவாசிகளே கவனம்! மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்”

தென் தமிழகத்தையும் அதனை ஒட்டிய பகுதிகளையும் சுற்றி ஒரு வழிமண்டலச் சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலும் வரண்ட வானிலையே நிலவும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படக்கூடும்.

நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வருகின்ற 18 முதல் 21ஆம் தேதி வரை தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆனால், வட தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெரும்பாலும் மழையில்லாமல் வரண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படலாம். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 29 முதல் 30°செ வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 21°செ வரையும் பதிவாகும்.

மீனவர்களுக்கு இன்று முதல் 18ஆம் தேதி வரை, தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வரையும், சில நேரங்களில் 55 கி.மீ வரையும் வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.