திருச்சி மாநகரம் மன்னார்புரம் பகுதியில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் கலைவாணி என்பவருக்கு, சிம்கோ மீட்டர் காலனியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் வங்கி கணக்கு உள்ளது. அவரது கணக்கில் 3,500 ரூபாய் வைத்திருந்தார்.
சில நாட்களுக்கு முன் குழந்தையின் மருத்துவச் செலவிற்காக ஏடிஎம் மூலம் பணம் எடுக்கச் சென்றபோது, கலைவாணியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் அதிர்ச்சியடைந்த கலைவாணி உடனே வங்கி அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டார். அப்போது வங்கி அதிகாரிகள் கூறிய தகவல் அவரை இன்னும் அதிகம் கலக்கமடையச் செய்தது.
“நீங்கள் 9 கோடியே 48 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். அதைத் தீர்த்தால்தான் உங்கள் கணக்கிலுள்ள முடக்கம் நீங்கும்,” என அதிகாரிகள் தீவிரமாக தெரிவித்தனர்.
இதைக் கேட்ட கலைவாணி, “எனக்கு குழந்தையின் மருத்துவச் செலவிற்கே பணம் இல்லாமல் 3,500 ரூபாய் எடுத்துக்கொள்ளவே வந்தேன். நான் எந்த தொழிலும் செய்யவில்லை. அப்படியிருக்க 9 கோடியே 48 லட்சம் ஜிஎஸ்டி என்னுக்கு எப்படி வருகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் வங்கி அதிகாரிகள் மேற்கொண்ட முழுமையான ஆய்வில், கலைவாணியின் ஆதார் அட்டை, பான் கார்டு, புகைப்படம், கையெழுத்து மாதிரி ஆகியவற்றை போலி முறையில் பயன்படுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ‘டிவிஎல் எஸ்பி எண்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டு, அதன்மூலம் வர்த்தகம் நடந்ததும், அதன் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான 9 கோடி 48 லட்சம் ரூபாய் செலுத்தப்படாமல் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வங்கி அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் நடத்தும் குறைதீர் நாள் கூட்டத்தில் கலைவாணி நேரில் சென்று புகார் அளித்தார். அவரின் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் காமினி உறுதியளித்து, சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க வழிகாட்டினார்.
பின்னர் கலைவாணி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், “இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் எங்களுக்கில்லை. கோவையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் முறையிட வேண்டும்,” என்று போலீசார் தெரிவித்தனர்.
கலைவாணி கூறியதாவது: “என் கணக்கை ஃப்ரீஸ் பண்ணிட்டாங்க. போனபோ தான் தெரியுது. ‘உங்க கணக்குல 9 கோடி மைனஸ்ல இருக்கு… நீங்க ஒரு கம்பெனி உருவாக்கி இருப்பீங்களா?’ என்று கேட்கறாங்க. நான் எதுவும் செய்யலன்னு சொல்லிட்டேன். என் பேர்ல ஸ்ரீவில்லிப்புத்தூர்ல ஒரு கம்பெனி துவங்கி, ஜிஎஸ்டி வரை எல்லாம் போட்டுருக்காங்க.
சைபர் கிரைம்ல ‘இது போர்ஜரி, மோசடி, டாக்குமெண்ட் ஃபேக்’ன்னு சொல்றாங்க. ஆதார், பான், போட்டோ, கையெழுத்து எல்லாம் எடுத்துக்கிட்டாங்க. என் அக்கவுண்ட் நம்பர்க்கு எந்த ஒரு நோட்டிபிகேஷனும் வரல. என் சேவிங்ஸ் அக்கவுண்ட் தான். 3,200 ரூபாய் மட்டுமே இருந்தது.
அத்தனைக்கும் ஃப்ரீஸ் ஆயிடுச்சு. நான் இதிலே எந்த தவறும் செய்யல.” கலைவாணி மேலும் கோரியதாவது: “நான் கை குழந்தையுடன் வாழ்கிறேன். இரண்டு குழந்தைகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. 15 நாட்களாக இந்த பிரச்சனையால் ஓடிக்கிட்டு இருக்கிறேன். கோவை வரை சென்று வர முடியாது. எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, என் வங்கி கணக்கை மீட்டு தர வேண்டும்.”








