திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் போதை சாக்லேட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அந்த கடையில் இருந்து 2.5 கிலோ எடையுள்ள 516 போதைச் சாக்லேட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை அடுத்த அம்பத்தூர் தொழில்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் போதைச் சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, போலீசார் மாறுவேடத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, ஒரு மளிகைக் கடைக்கு அதிக அளவில் ஆண்கள் வருவதை அவர்கள் கவனித்தனர்.
இதையடுத்து, மாறுவேடத்தில் சென்ற போலீசார் அந்தக் கடைக்கு சென்று சாக்லேட் வாங்கும்வர்த்தகர் போல நடித்து, போதைச் சாக்லேட் கேட்டனர். அப்போது கடையில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அவர்களே போலீசர்கள் என்பதை அறியாமல், போதைச் சாக்லேட்டை அவர்களுக்கு கொடுத்தார்.
உடனே அந்தப் பெண்ணை கையும் களவுமாக பிடித்த போலீசார், அவரிடமிருந்து 2.5 கிலோ எடையுள்ள 516 பாக்கெட்டுகள் போதைச் சாக்லேட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கடையிலும் சோதனை நடத்தி, மீதமுள்ள போதைச் சாக்லேட்களையும் கைப்பற்றினர்.
போலீசார் விசாரணை நடத்தியதில், அந்தப் பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கீதா என்பதும், கடந்த 20 ஆண்டுகளாக அத்திப்பட்டு பகுதியில் தங்கி, ஒரு அட்டை பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்ததும், சமீபத்திய ஆண்டுகளில் மளிகைக் கடை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
அவரிடம் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த போதைச் சாக்லேட்களை அவர் எங்கிருந்து வாங்கி வந்தார், யார் யார் வழங்கினர், மேலும் எந்த எந்த இடங்களில் விற்பனை செய்தார் என்பதைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அத்திப்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








