தூத்துக்குடியில் கார் விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரை அதிவேகமாக இயக்கியதுதான் விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை 2.50 மணியளவில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ரோஜா பூங்கா அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராகுல் ஜெபஸ்தியன், கோயம்புத்தூரை சேர்ந்த சாருபன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முகிலன், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். சாரன் மற்றும் கீர்த்திகுமார் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகாலை நேரம் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், அதிவேகமாக வந்த கார் சாலையில் வழுக்கி கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இரவு 2.50 மணிக்கு ஏன் வெளியே சென்றனர், மது அருந்தியிருந்தார்களா என்பதைப் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மூவரின் உடல்களில் ஒருவரின் உடல் மட்டும் மரத்தில் மோதியதில் கடுமையாக சிதைந்திருந்ததால், தீயணைப்புத்துறையினர் மிகுந்த முயற்சியுடன் மீட்டெடுத்து ஒப்படைத்தனர். இந்த துயரச் சம்பவம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








