Home தமிழகம் “ஒரு ஊசி, இரண்டு பாதுகாப்பு! — சென்னை மக்களுக்கு அழைப்பு”

“ஒரு ஊசி, இரண்டு பாதுகாப்பு! — சென்னை மக்களுக்கு அழைப்பு”

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம், 1998 – அதன் 2023 திருத்த விதிகளின் படி, பிரிவு 292ன் கீழ், மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மைக்ரோ சிப் பொருத்துதல் போன்ற சிறப்பு முகாம்கள் மூன்று தினங்கள் நடத்தப்படுகின்றன.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த முகாமில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை தொடர்ந்து, இன்றும் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மொத்தம் மூன்று நாட்கள் — 9 ஆம் தேதி, 16 ஆம் தேதி மற்றும் 23 ஆம் தேதி — இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, நடத்தப்பட இருக்கிறது.

இந்த முகாமின் மூலம் உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில், வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துதல் மற்றும் வெறிநாய் கடி (ரேபிஸ்) நோய் தடுக்கும் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சியின் திருவிக்கா நகர், புளியந்தோப்பு, லாய்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் உள்ளிட்ட ஏழு பகுதிகளில் இந்த சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் 727 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்களை கொண்டு வந்து தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 1200-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என்றும், அருகிலுள்ள அனைத்து பகுதிகளிலும் வாழும் நாய் உரிமையாளர்கள் தங்களது செல்லப்பிராணிகளை கொண்டு வந்து தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.