Home தமிழகம் பெண்கள் பாதுகாப்பில் முன்னிலை: தமிழகத்திற்கு உயர் நீதிமன்ற பாராட்டு

பெண்கள் பாதுகாப்பில் முன்னிலை: தமிழகத்திற்கு உயர் நீதிமன்ற பாராட்டு

பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லையைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் சுப்ரஜா, ரஷ்மி, வனிதா உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கின் முக்கிய சாராம்சம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம் போன்ற புகார்களை விசாரிப்பதற்கான குழுக்கள் (Internal Complaints Committee) முறையாகச் செயல்பட வேண்டும்; புகார் பெட்டிகள் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான்.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்கள்—அரசுப் பணியோ தனியார் பணியோ எதுவாயினும்—அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் அனைத்தும் தொடர்ச்சியாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவை நீதிபதி மஞ்சுளா அவர்களிடம் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டன. விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.

குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டு துறை, சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; அவற்றை கண்காணிப்பதற்கான நோடல் அதிகாரிகள்(Nodal Officers)நியமிக்கப்பட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட விவரங்களை அரசு சமர்ப்பித்துள்ளது.

இத்துடன், தமிழக அரசின் தலைமைச் செயலர் தொடர்ந்து சுற்றறிக்கைகளை அனுப்பி அவை நடைமுறையில் அமல்படுத்தப்படுவதற்கான கண்காணிப்பையும் பலப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகளைப் பரிசீலித்த பிறகு, நீதிபதி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக, அரசு அறிக்கைகள் வெளியிடுவதிலேயே நிற்காமல், அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை நடைமுறையில் செயல்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருவது பாராட்டத்தக்கது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கவை, மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்கள் பாதுகாப்புக்கான கண்காணிப்பை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்; இதற்கான நிதி ஒதுக்கீடுகளை அரசு அதிகரிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.