தமிழகத்தில் நடைபெற்ற “கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில்” புதுமைப்பெண் திட்டத்தின் பயனாளிகளாக இருக்கும் பல மாணவிகள் மேடையில் பேசினர். அந்த திட்டம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை, கண்ணீர் மல்க அவர்கள் பகிர்ந்தபோது, பார்வையாளர்களும் கண்கலங்கினர்.
ஒரு மாணவி தனது உரையில், “என் கையில் வந்த முதல் மாதச் சம்பளத்தை, என் அப்பாவின் கைகளில் தர வேண்டும் என்பதே என் ஆசை. என் கல்வி பயணத்தில் என்னை எப்போதும் தாங்கியவர் என் அப்பாவே. நான் எந்தக் கனவையும் சொன்னாலும், ‘முடியும்’ என்று உற்சாகம் தந்தது அப்பாவே. எனக்கு அப்பா மட்டுமே உலகம்,” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.
மற்றொரு மாணவி, தனது அம்மா கேட்க முடியாதவர் என்றாலும், “நான் மாதந்தோறும் கிடைக்கும் உதவித் தொகையில் 100 ரூபாய் சேமித்து, அம்மாவுக்கு ஒரு மெஷின் வாங்கி கொடுத்தேன். இன்று என் அம்மா அந்த மெஷினால் கேட்கிறார் என்பது எனக்கு பெருமை,” எனப் பகிர்ந்தார்.
மேலும், “என் மிகப்பெரிய ஆசை மேக்ஸ் டீச்சராக வேண்டும் என்பதுதான். புதுமைப்பெண் திட்டம் இப்போது யூஜி படிக்கும் மாணவிகளுக்கே கிடைக்கிறது. அதை பிஜிக்கும் நீட்டிக்க வேண்டும்,” என மாணவிகள் நேரடியாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த உரைகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் உருக்கியது. கல்வி வாயிலாக தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இந்த மாணவிகளின் குரல்கள், புதுமைப்பெண் திட்டத்தின் சமூகப் பெருமையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தின.








