ராமநாதபுரம் மாவட்டத்துக்காக அரசு சார்பில் மொத்தம் 9 முக்கியமான புதிய வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாலை, கல்வி, நீர்வள மேம்பாடு, வணிக வசதிகள், அலுவலக கட்டடங்கள் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய இந்த திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
முதலாவது கட்டமாக, ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதி தற்போது உள்ள நான்கு வழிச்சாலையிலிருந்து ஆறு வழிச்சாலையாக 30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இது மாவட்டத்தின் போக்குவரத்து வசதியை பெரிதும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து, திருவாடனை மற்றும் ஆர்.எஸ். மங்கலம் வட்டங்களில் உள்ள 16 முக்கிய கண்மாய்கள் 18 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு நீர்தேக்க திறன் அதிகரிக்கப்படும். அதேபோல், கீழக்கரை வட்டத்தில் உள்ள உத்திரசோகமங்கை, வித்தானூர் உள்ளிட்ட 6 கண்மாய்கள் 4 கோடி 65 லட்சம் ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்படவுள்ளன.
கடலாடி வட்டத்தில் உள்ள செல்வனூர் கண்மாய் 2 கோடி 60 லட்சம் ரூபாய் மதிப்பில், மேலும் சிக்கல் கண்மாய் 2 கோடி 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பரமக்குடி நகராட்சிக்காக 4 கோடி 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படும். ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள பழைய பேருந்து நிலையம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு நவீன வணிக வளாகமாக மாற்றப்படும்.
கல்வி துறையில், ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு, புதிய பாடப்பிரிவுகள் தொடங்கும் வகையில் வசதிகள் உருவாக்கப்பட்டுவுள்ளன.
கீழக்கரை நகராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடமும், 1 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன மீன் சந்தையும் அமைக்கப்படும்.
இறுதியாக, கமுதை பகுதியில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக 1 கோடி ரூபாய் செலவில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர் பதன கிடங்கு அமைக்கப்படும். இந்த ஒன்பது வளர்ச்சி பணிகளும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.








