திருவடிமருதூரை அடுத்த பந்தநல்லூர் அருகே உள்ள இடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடல் மாயமாகியுள்ளது. அரசரடி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி உடல் நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், நேற்று அவர் உடல் புதைக்கப்பட்டது. இன்று சடங்கு செய்வதற்காக உறவினர்கள் இடுகாட்டிற்கு சென்றபோது, சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். புதைக்கப்பட்ட உடலை யார், எந்த காரணத்திற்காக தோண்டி எடுத்தனர் என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவடிமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் பகுதியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசரடி கிராமத்தைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவி தர்ஷிகா, இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மாலை மன்னியாற்று கரையில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.
இன்று காலை சடங்கு செய்வதற்காக குடும்பத்தினர் சென்றபோது உடல் காணாமல் போனது தெரியவந்தது. மந்திரவாதிகள் நரப்பலி போன்ற செயல்களுக்காக உடலை எடுத்துச்சென்றார்களா அல்லது வேறு காரணமா என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.








