வங்கக்கடலில் இலங்கை அருகே உருவான ‘டித்வா’ புயல் வரும் 30ஆம் தேதி புதுவை–ஆந்திரா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘டித்வா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை, கடலூர், நாகை, என்னூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்கரைக்கு அருகில் உருவான தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு–வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இது தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது இலங்கையின் அம்பாந்தோட்டை இருந்து 150 கி.மீ, மட்டக்களப்பு இருந்து 190 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து நகர்ந்து புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகரும் நிலையில், வரும் 30ஆம் தேதி புதுச்சேரி–தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதன் தாக்கமாக தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும், புதுவை–காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பொழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் முழுத் தயார்நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
டித்வா புயல் தாக்கத்தால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளதால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க நீர்வளத்துறையின் 8 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கள ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.








