திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே முருகானந்தபுரம் பகுதியில், திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்தில் 65 முதல் 80 பேர் வரை பயணம் செய்திருந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நிலைமையைப் பொறுத்து சிலர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து விசாரித்தபோது, திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் நோக்கி இன்று காலை புறப்பட்ட அரசு பேருந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் சாலையின் இருபுறமும் மண் குவிந்திருந்தது காரணமாக சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. எதிரே வந்த வாகனத்துக்கு இடம் கொடுக்க ஓட்டுநர் பேருந்தை இடதுபுறமாக இயக்கிய போது, மண்ணில் சிக்கி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேருந்தில் 83 பேர் வரை பயணம் செய்திருந்திருக்கலாம் எனவும், விபத்து நேரத்தில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 60 பேருக்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.
விபத்து ஏற்பட்டதும் தகவல் கிடைத்து, 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை, காவல்துறை உள்ளிட்ட குழுக்கள் விரைந்து செயல்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளன.
விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட தகவலின்படி, பருவமழை காரணமாக சாலையின் இருபுறமும் இருந்த மண் இருந்ததால், பேருந்து இடப்புறமாக இறங்கியபோது சரிந்து கவிழ்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








