Home தமிழகம் ‘உடனே கைது செய்யுங்கள்!’—சுர்ஜித் தாயார் மீது நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

‘உடனே கைது செய்யுங்கள்!’—சுர்ஜித் தாயார் மீது நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய திருநெல்வேலி கவின் ஆணவக் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுர்ஜித்தின் தாயாரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, திருநெல்வேலி இரண்டாவது வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சற்று முன் சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.

சுர்ஜித் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருடைய தந்தை மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் சரவணனும் சிறையில் உள்ளார். அவர்களின் உறவினர் ஜெயபாலும் சிறையில் இருக்கிறார். இவர்கள் மூவரும் சிறையில் இருக்கும் நிலையில், சரவணன் தொடர்ந்து ஜாமீன் கோரி மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். அதேபோல் ஜெயபாலும் ஜாமீன் கோரி வந்துள்ளார்.

இன்று ஜெயபாலின் ஜாமீன் மனு குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது, இந்தக் கொலை வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக சிபிசிஐடி தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

இதன் மூலம் வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. சமீபத்தில் மீண்டும் ஜாமீன் கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது; இதுவரை எந்தத் தீர்ப்பும் வழங்கப்படவில்லை.

வழக்கின் முழு விவரங்களையும் தொடர்ந்து கவனித்து வருவதாக நீதிபதி ஹேமா தெரிவித்ததோடு, கிருஷ்ணகுமாரியை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்ற தனது உத்தரவையும் மீண்டும் வலியுறுத்தினார்