தமிழ் நாடு முழுவதும் தேர்தல் சூடேறிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் பயணம் திருச்சி நகரை பரபரப்பாக்கியது.
காலை 2.00 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்ட விஜய், 8.45 மணிக்கு விமானத்தில் ஏறி புறப்பட்டு, காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி அவருக்கு வரவேற்பளித்தனர். விமான நிலையத்திலிருந்து டிவிஎஸ் டோல்கேட் வரையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.
விஜயின் தேர்தல் பிரச்சார வாகனம் நகரின் மையப்பகுதிகள் வழியாகச் சென்றது. டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து பாலக்கரை, ரவுண்டானா, தலைமை தபால் நிலையம், நீதிமன்றம், சத்திரம் பேருந்து நிலையம், கண்டோன்மென்ட் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிறைந்தன. இருபுறமும் அடர்ந்த வணிக வளாகங்கள் உள்ள பகுதியாக இருந்ததால், வாகனம் மெதுவாக நகர்ந்தது. இதனால் திருச்சி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்பட்டன.
ஆரம்பத்தில் தொண்டர்களை பொறுமையாக கையாள்ந்த காவல்துறை, பின்னர் நேரடியாக தலையிட்டு, கயிறு மற்றும் தடுப்பு ஏற்பாடுகள் செய்து வாகனத்திற்கான வழியைத் திறந்தது. வாகனம் விரைவாக நகரச் செய்வதற்காக காவல்துறையினர் முன்வந்து வழி நடத்தினர்.
கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு மூன்று மணி நேரம் எடுத்துக்கொண்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரம், விஜயின் வருகையை ஒரு திருவிழா போல் மாற்றியது. விரைவில் அவர் மரக்கடை பகுதிக்கும் சென்றடைய உள்ளார்.
திருச்சியின் மையப்பகுதி முழுவதும் விஜயின் தேர்தல் பிரச்சாரம் மக்கள் திரளால் கண்கொள்ளாக் காட்சியை ஏற்படுத்தியது.








