Home தொழில்நுட்பம் வாட்ஸ்அப் மோசடியில் சிக்கிய 8ஆம் வகுப்பு மாணவன்

வாட்ஸ்அப் மோசடியில் சிக்கிய 8ஆம் வகுப்பு மாணவன்

பிரான்ஸில் இருந்து 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு அனுப்பியதாக நம்ப வைத்து, மோசடி கும்பல் ₹45,000 ரூபாய் சுருட்டியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, வாட்ஸ்அப் வழியாக வந்த போலி செய்தியை நம்பி, எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் தையல் (டெய்லரிங்) வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். அவருடன் தம்பியான 13 வயது சிறுவனும், ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த இளம் பெண்ணின் செல்போனை சிறுவன் அவ்வப்போது பயன்படுத்தி வந்துள்ளார்.

முந்தைய நாளில் காலை, அந்த பெண்ணின் மொபைலுக்கு வாட்ஸ்அப் வழியாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், “பிரான்ஸில் இருந்து 70,000 அமெரிக்க டாலர் (சுமார் 62 லட்ச ரூபாய்) மதிப்பிலான பரிசுப் பொருள் அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தது.

அந்தப் பரிசு விமானத்தின் மூலம் கியூரியர் வழியாக அனுப்பப்பட்டதாகவும், எந்தக் கட்டணமும் செலுத்தாமல் அதை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழில் தட்டச்சு செய்யப்பட்ட செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

பின்னர் ஒரு பெண் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “சேவை கட்டணமாக ₹5,000 ரூபாய் அனுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனை உண்மையாக நம்பிய சிறுவன், அக்காவுக்கு தெரியாமல் அவரது Google Pay வழியாக ₹5,000 அனுப்பியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, வாட்ஸ்அப் வழியாக தொடர்ச்சியாக தமிழில் செய்தி அனுப்பிய மோசடி கும்பல், பல்வேறு காரணங்களைக் கூறி மேலும் ₹15,000, ₹25,000 என மொத்தம் ₹45,000 ரூபாய் வரை பெற்றுள்ளனர்.

பின்னர், “பார்சல் டெல்லி விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 62 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் உள்ளன. இதற்கான வரியாக ₹1.6 லட்சம் செலுத்த வேண்டும்” என்றும் கூறி, சிறுவனிடமிருந்து மேலும் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளனர்.

அதற்காக சிறுவன் “என்னிடம் இவ்வளவு பணம் இல்லை. பரிசுப் பொருள் வேண்டாம்; நான் அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்புங்கள்” என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு எந்த பதிலும் வரவில்லை. பின்னர் அவர் அழைத்தபோது, அந்த எண் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. இதனை சிறுவன் வீட்டில் யாருக்கும் சொல்லாமல் இருந்துள்ளார். நேற்று காலை, அவரது அக்கா Google Pay மூலம் பொருள் வாங்க முயன்றபோது, பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

விசாரித்தபோது, சிறுவன் 45,000 ரூபாய் பரிசுப் பொருளுக்காக அனுப்பி ஏமாந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் வாட்ஸ்அப் செய்திகளைப் பார்த்தபோது தமிழில் அனுப்பப்பட்ட அந்த போலி செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உறவினர்களிடம் ஆலோசனை பெற்றபின், இது ஒரு மோசடி நடவடிக்கை என உறுதி செய்யப்பட்டு, உடனடியாக வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகார் பெற்ற போலீசார், பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். பணம் மீட்கும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.