Home உலகம் “டிட்வாவில் தத்தளிக்கும் இலங்கை—உதவிக்கு இந்தியாவின் சக்தி கப்பல்கள்!”

“டிட்வாவில் தத்தளிக்கும் இலங்கை—உதவிக்கு இந்தியாவின் சக்தி கப்பல்கள்!”

பெரு மழையும் கட்டவிழ்த்த வெள்ளமும் காரணமாக இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் உதவி செய்ய, ஆபரேஷன் சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இந்தியா தனது இரண்டு முக்கியமான கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளது.

இலங்கைக்கு உதவச் சென்றுள்ள இந்த கப்பல்கள் INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி. டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதிகளில் நிவாரண மற்றும் மீட்பு பணிகளுக்கு இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன.

INS விக்ராந்த் :

INS விக்ராந்த் என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்கப்பல். இது 2022-ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் மற்றும் 45,000 டன் எடையுடன் மிகப்பெரிய பரப்பளவை கொண்டது.

இந்த கப்பலின் 1,34,000 சதுரஅடி பரப்பளவு இரண்டு கால்பந்து மைதானங்களுக்குச் சமமானது. இதில் ஒரே நேரத்தில் 1600 முதல் 1700 பேர் வரை பயணிக்க முடியும். அதன் பரப்பளவு மற்றும் வசதிகள் காரணமாகத்தான் இது “மிதக்கும் நகரம்” என்று அழைக்கப்படுகிறது.

விமானங்களை ஏற்றி செல்லும் திறன் கொண்டதால், பெருந்தொகையான நிவாரணப் பொருட்களையும், பல ஹெலிகாப்டர்களையும் கொண்டு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட விக்ராந்த் மிகப்பெரிய உதவியாகும்.

INS உதயகிரி :

INS உதயகிரி இந்தியாவில் உருவாக்கப்பட்ட அதிநவீன ஏவுகணைத் தாங்கி போர்கப்பல். ரேடாரில் சிக்காமல் கடலில் நகரும் stealth தொழில்நுட்பத்தைக் கொண்டது. இந்த கப்பல் 149 மீட்டர் நீளம், 6670 டன் எடை கொண்டது.

இது மணிக்கு 28 knots அல்லது சுமார் 52 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றது. நீரும் வானமும் நீர்மூழ்கியும் — மூன்று திசையிலும் போராடக்கூடிய பல்துறை திறனுள்ள போர்கப்பல் உதயகிரி.

அதன் வேகமும் திறனும் காரணமாக புயல் பாதித்த பகுதிகளுக்கு மிக விரைவாக சென்று மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடியும்.