அமெரிக்கா அதிபர் டிரம்பின் தவறான நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கே இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பெண்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் பரபரப்பை கிளப்பியுள்ளார். தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு ஆதரவாக கூறிய கருத்துகள் டிரம்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதித்து டிரம்ப் அதிர்ச்சி கொடுத்தார். அதே நேரத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத இந்தியா, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், இந்தியாவின் மீது மேலும் 25% வரி விதித்து மீண்டும் அதிர்ச்சி அளித்தார்.
இதன் காரணமாக இந்தியா–அமெரிக்க உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கத்தை அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் நீண்டகால நெருங்கிய உறவு இருந்து வந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்திருந்தது முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக எடுத்த முடிவுகள், இந்தியா–ரஷ்யா உறவை மேலும் நெருக்கமாக்க வழிவகுத்ததாக அமெரிக்காவிலேயே விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து பேசிய முன்னாள் பெண்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் வெளிப்படுத்திய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
“இந்தியா மற்றும் ரஷ்யாவை ஒரே பாதையில் சேர்த்ததற்காக டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம்,” என்று அவர் கிண்டலாக கூறினார்.
மேலும், பாகிஸ்தான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் புகழ்ச்சியில் மயங்கி டிரம்ப் எடுத்த முடிவுகள், இந்தியாவுடனான அமெரிக்க உறவை சீர்குலைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவை விமர்சிப்பது நியாயமற்றது என்றும், இந்திய தலைவர்கள் தங்கள் நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவை குறைசொல்வதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். ட்ரம்பின் இந்த முடிவுகள் அமெரிக்காவுக்கே இழப்பாக முடியும் என்று மைக்கேல் ரூபின் எச்சரித்தார். அவரது கருத்துகள் அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், இந்தியாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோதியிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்க பிரபல பாடகி மேரி மில்பர்ன் தெரிவித்துள்ளார்.
“இது குறித்து பேசும்போது, இந்திய பிரதமர் மோடி மிக முக்கிய அரசியல் தலைவரும், அதிக செல்வாக்கு மிக்கவரும் என்பதை உலகம் மறக்க முடியாது. டிரம்ப் எடுத்த நடவடிக்கை மிகவும் தவறானது.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மீண்டும் சரி செய்ய, டிரம்ப் பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு அழைக்க வேண்டும்,” என அவர் அறிவுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் டிரம்ப் எவ்வாறு பதிலளிப்பார் என்பது காத்திருந்து பார்க்க வேண்டியதாக உள்ளது.








