திருமண மேடை, மணமக்கள், பாரம்பரிய இசை—அனைத்தும் இயல்பாக நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், ஸ்ரீவைகுண்டம் அருகே நடந்த ஒரு திருமணத்தில் எதிர்பாராத விதமாக நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல்–ஜெயா தம்பதிகளின் மூத்த மகள் நந்தினி அமிர்தா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். அவரது திருமணம் சாயர்புரம் அருகிலுள்ள நடுவக்குறிச்சியில் அமைந்த திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
தாலிக்கட்டு போன்ற முக்கிய நிகழ்வுகள் முடிந்து, மணமேடையில் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர். அதன்பின் திடீரென அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு காட்சி நிகழ்ந்தது. மணப்பெண் நந்தினி அமிர்தா, மணமேடையிலிருந்து கீழிறங்கி சிலம்பம் சுற்றத் தொடங்கினார்.
திருமண வீட்டாரும், மணமகனும், அங்கு இருந்த நூற்றுக்கணக்கான விருந்தினரும் ஒரே நேரத்தில் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் உறைந்து நின்றனர். சிலம்பத்தை வேகமாகவும் நுட்பமாகவும் சுழற்றிய நந்தினியின் திறமை அங்கே இருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
அதுமட்டுமல்லாமல், மணப்பெண்ணின் சகோதரியும் அவருடன் சேர்ந்து சிலம்பம் சுற்றத் தொடங்கியதால், முழு திருமண மண்டபமும் கலாச்சார விழாவை ஒத்ததாய் மாறியது. கைதட்டல், ஆரவாரம், செய்து மகிழ்ந்தனர்.
இதில் இரண்டாவது அதிர்ச்சி என்னவென்றால், நந்தினி பின்னர் சுருள்வாளும் (Surul Vaali) சுற்றத் தொடங்கினார்.
பெண் குழந்தைகள் திருமண மேடையில் இவ்வளவு தன்னம்பிக்கையுடன், திறமையாக வாள்சுற்றுவது அங்கு இருந்த அனைவரையும் வாயடைத்துப் போகச்செய்தது. இந்த எதிர்பாராத கலாச்சாரத் திறமையால் திருமண விழா ஒரு புதிய திருப்பத்தை பெற்றது.
அங்கு இருந்தவர்கள் அனைவரும் தங்களது செல்போன்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். “மணமேடையில் சிலம்பம் சுற்றிய மணப்பெண்” என்ற தலைப்பில் அந்த வீடியோ காட்சிகள் இப்போது வைரலாகி வருகின்றன.








