Home தமிழகம் “அடுத்த வாரம் கடும் குளிர்! தமிழகம் நடுங்க வைக்கும் லா நினா”

“அடுத்த வாரம் கடும் குளிர்! தமிழகம் நடுங்க வைக்கும் லா நினா”

அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் குளிர் தீவிரம் அதிகரிக்கப் போவதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் காணப்படும் அதீத குளிருக்கு முக்கிய காரணம் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள லா நினா என்கிற உலகளாவிய காலநிலை மாற்றமே.

பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை குறைந்தால் லா நினா ஏற்படும்; இது உலகம் முழுவதும் குளிர் அதிகரிக்க காரணமாகிறது.

அதன் தாக்கமே தற்போது தமிழ்நாட்டையும் சூழ்ந்துள்ளது. அதன் விளைவாக தமிழ்நாட்டின் வெப்பநிலை பல இடங்களில் 10 டிகிரி வரை குறைய வாய்ப்பு உள்ளது. வட இந்தியாவிலிருந்து வரும் வறண்ட காற்றும் இதை மேலும் அதிகரிக்கிறது.

உள் மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் வெப்பநிலை 16–18 டிகிரியாக, கடலோர மாவட்டங்கள் — குறிப்பாக சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகை பகுதிகளில் — 18–21 டிகிரியாக குறையும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெப்பநிலை 10 டிகிரிக்கு கீழும், ஊட்டி–வால்பாறை போன்ற இடங்களில் உறைப்பனியும் காணப்படலாம்.

இதே நேரத்தில், இலங்கை அருகே நிலவும் தாழ்வு காற்றழுத்தத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வட–கிழக்கு இலங்கையில் கனமழை பெய்து வருகிறது; அதின் தாக்கம் காவிரி டெல்டா பகுதிகளிலும் தோன்றியுள்ளது.

ஹேமச்சந்தர் கூறுவதன்படி, இன்று முதல் அடுத்த 4–5 நாட்கள் தென்னிந்தியா முழுவதும் “முதல் கட்ட குளிர்” அதிகரிக்கப் போகிறது.

வடக்காற்று தீவிரமாக வீசுவதால் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர், மதுரை, தேனி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் வெப்பநிலை கணிசமாகக் குறையும்.

மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஒட்டிய பகுதிகளில் — உதகை, வால்பாறை, மூனாறு — 8–10 டிகிரி வரையிலும் குறைந்து உறைபனி உருவாகும் வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 16, 17, 18 தேதிகளில் கிழக்குக் காற்றின் தாக்கத்தால் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மொத்தத்தில்,

உள் மாவட்டங்களில் 16–18°C

கடலோரங்களில் 18–21°C

மலைப்பகுதிகளில் 10°Cக்கு கீழ்

என்று வெப்பநிலை குறையக்கூடும். மார்கழி பிறப்பதற்கு முன்பே குளிர் தீவிரம் அதிகரித்து, இடையிடையே மழையும் தோன்றும் நிலை தொடரும்.