கிறிஸ்துமஸுக்கு பிறகு 215 கிலோமீட்டருக்கு மேல் பயணிப்போருக்கான கட்டண உயர்வை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் இந்த கட்டண உயர்வுக்கு ரயில் பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகம் புதிய கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
அதில் 215 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பயணிகளுக்கு கட்டண உயர்வு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயணிகள் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டண உயர்வு இல்லை.
அதே நேரத்தில், 215 கிலோமீட்டருக்கு அதிகமான பயணங்களுக்கு,
- சாதாரண வகுப்புகளில் கிலோமீட்டருக்கு ஒரு பைசா,
- மெயில் மற்றும் விரைவு ரயில்களில் உள்ள ஏசி மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளில் பயணிப்போருக்கு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஏசி இல்லாத பெட்டிகளில் 500 கிலோமீட்டர் தொலைவுக்கு 10 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு டிசம்பர் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த கட்டண உயர்வுக்கு ரயில் பயணிகளும் பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய செலவுகள், நடைமுறைச் செலவுகள் அதிகரிப்பு, பயணிகள் பாதுகாப்புக்கான செலவுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் ரயில்வே அமைச்சகத்திற்கு 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








