Home திரையுலகம் ”இளையராஜாவுக்கு ஷாக்! டியூட் பாடல் விவகாரத்தில் நீதிபதி கேட்ட ஒரு கேள்வி”!

”இளையராஜாவுக்கு ஷாக்! டியூட் பாடல் விவகாரத்தில் நீதிபதி கேட்ட ஒரு கேள்வி”!

டியூட் பட பாடல் விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நீதிபதி கேள்விகளை எழுப்பியுள்ளார். தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான புதுநெல்லு புது நாத்து திரைப்படத்தில் இடம் பெற்ற “கருத்த மச்சான்” பாடலும், பணக்காரன் படத்தில் இடம்பெற்ற “100 வருஷம் படத்தில் இந்த மாப்பிள்ளைக்கு” பாடலும் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த இரண்டு பாடல்களையும் நீக்க வேண்டும், மேலும் இந்த பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், தங்களது அனுமதி இல்லாமல் பதிப்புரிமை சட்டத்தை மீறி இந்த பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக வாதிட்டார்.

மேலும், இந்த பாடல்களை மாற்றியமைத்து பயன்படுத்தியுள்ளனர், பாடல்களின் உரிமை தங்களிடம் தான் உள்ளது. எக்கோ நிறுவனம் தங்களது பாடல்களை பயன்படுத்துவதற்கு முன்பே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இளையராஜா தரப்பு தெரிவித்தது.

அதே சமயம், டியூட் திரைப்பட தயாரிப்புத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், அந்த பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனம் பெற்றுள்ளதாகவும், சோனி நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்று தான் பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

விசாரணையின் போது நீதிபதி, “30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை இன்றும் மக்கள் ரசிக்கிறார்கள். இதனால் இளையராஜாவுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது? பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்துவது இப்போது ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது,” என்று குறிப்பிட்டார்.

மேலும், படம் திரையரங்கிலும், ஓடிடி தளத்திலும் வெளியான பிறகு இதுவரை அமைதியாக இருந்துவிட்டு, இப்போது தான் வழக்கு தாக்கல் செய்தது ஏன் எனும் கேள்வியையும் இளையராஜா தரப்பிடம் நீதிபதி எழுப்பினார். இந்த மனுவின் மீது உத்தரவை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.