பள்ளி மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தக் கூடாது என்பதற்காகவும், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவி செய்யவும், படிப்பில் சிறந்த திறமை காட்டும் மாணவர்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசும் மாநில அரசும் பல கல்வி உதவித் திட்டங்களை நடத்தி வருகின்றன.
அதில் ஒரு முக்கியமான திட்டம் தான் தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS). இந்த திட்டத்தை மத்திய அரசு கல்வி அமைச்சகம் நடத்துகிறது.
இந்த திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக மட்டுமே.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் இந்த NMMS தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் மட்டும் 6,695 மாணவர்களும், நாடு முழுவதும் சேர்த்து ஒரு லட்சம் மாணவர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்படும். அதாவது நான்கு ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூபாய் 48,000 கிடைக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 12,000 மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டிற்கான NMMS தேர்வு ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தேர்வுத்துறை இணையதளமான dge.tn.gov.in என்ற முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதன்பின், அதை முறையாக பூர்த்தி செய்து, தேர்வு கட்டணமாக ரூபாய் 50 இணைத்து, தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வரும் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரங்கள் தேவையெனில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.








