இந்தியாவில் ஜப்பானிய மொழி கற்பவர்களின் எண்ணிக்கை கடந்த இரு தசாப்தங்களில் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துள்ளது.
ஜப்பான் பவுண்டேஷன் தரவுகளின்படி, ஜப்பானிய மொழி கற்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2003 ஆம் ஆண்டில் 5,446 ஆக இருந்தது. இது 2024 ஆம் ஆண்டில் 52,946 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு நாடுகளில் குடியேற்றக் கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதால், இந்தியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக கிழக்கு நாடுகளை நோக்கிச் செல்ல வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.
மேலும் ஜப்பானில் முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அவர்களை உடனிருந்து பார்த்துக் கொள்வதற்கு அதிகமான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்த பணிகளுக்கு ஜப்பானிய மொழி தெரிந்திருப்பதே அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது. இந்த வேலைகளுக்கு ஆரம்பச் சம்பளமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.80,000 வழங்கப்படுகிறது.
இதற்குப் பிறகும் ஜப்பானில் மெக்கானிக்கல், மின்சாரம், கட்டுமானம், வாகன உற்பத்தி, ரப்பர் தொழில், விவசாயம் போன்ற துறைகளிலும் இந்தியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹிந்தி மொழிக்கும் ஜப்பானிய மொழிக்குமான பல இலக்கண விதிகள் பொதுவாக இருப்பதால், வட இந்தியர்களுக்கு ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்வது எளிதாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.








