கிரிக்கெட் உலகில் ‘தி ஜட்ஜ்’ என்று போற்றப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ராபின் ஸ்மித் காலமானார். அவரது சாதனைப் புத்தகத்தின் சில நினைவுகள்
1980களின் இறுதியிலும் 90களிலும் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர்களில் ஒருவர் ராபின் ஸ்மித். வேகப்பந்து வீச்சாளர்களை வீம்புடன் எதிர்கொண்டு ரன்கள் குவிக்கும் திறன் அவருக்கு இருந்தது.
1990ல் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, அவரின் ஆட்டத் திறனை கண்டு அதிர்ச்சியடைந்த கரீபியன் பந்து வீச்சாளர்கள் லகுவான திட்டம் ஒன்றை அமைத்தனர்.
ராபின் ஸ்மித்தை பவுன்சர்களால் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்தனர். ஆனாலும் ராபின் அஞ்சாமல் விளையாடினார்.
ஆண்டிகுவாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆம்ப்ரோஸ், கட்னி வால்ஸ், இயான் பிஷப் ஆகியோர் தொடர்ந்து வேகமான பந்துகளை வீசினர்.
இரண்டு ஓவர்களில் 11 பவுன்சர்கள் வீசப்பட்ட நிலையில், ஒரு பந்து ராபின் ஸ்மித்தின் தாடையைத் தாக்கியது. இருந்தபோதிலும், வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் அவரது தைரியம் குறையவில்லை.
1992 உலகக்கோப்பையில் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய இங்கிலாந்து அணியில் ராபின் ஸ்மித் ஒரு முக்கிய அங்கமாக விளங்கினார்.
1993ல் இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்தபோது, சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ராபின் ஸ்மித்திடம் மத்திய வரிசையிலிருந்து தொடக்க வீரராக ஆடும்படி பொறுப்பு வழங்கப்பட்டது.
சுட்டெரிக்கும் வெயிலில் அவர் கூலர் காலர் என்ற குளிரூட்டும் உபகரணத்துடன் விளையாடி, இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமடித்தார். 80ஸ் கிட்ஸ்களுக்கு அது இன்னும் மறக்க முடியாத நினைவாக உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்த ராபின் ஸ்மித், 1988 முதல் 1996 வரை இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 4000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
1996ல் ஓய்வு பெற்ற பிறகு மன உளைச்சலுக்கு ஆளான அவர் மது பழக்கத்திற்குள் சிக்கினார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், 62வது வயதில் ராபின் ஸ்மித் காலமானார். அவரின் ஸ்டைலான ஆட்டமும் தனித்துவமான உருவமும் இன்றும் ரசிக்கத்தக்கவையே.








