திண்டிவனம் எஸ்கேபி கல்லூரி அருகே சாலையோரத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை அழுது கொண்டே சுற்றித்திரிந்தது. அப்போது அங்கு சென்ற ஒரு பெண், அந்தக் குழந்தையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
குழந்தையை வைத்து விசாரணை நடத்திய போலீசார், அந்தக் குழந்தை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் – அம்சா தம்பதியரின் மகன் என்பதை கண்டறிந்தனர்.
கடந்த 15ஆம் தேதி காலை 11 மணியளவில் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அம்சா மாயமானதாக தெரியவந்தது. தாயுடன் சென்ற இந்தக் குழந்தை மட்டும் திண்டிவனத்திற்கு எப்படிச் சென்றது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை தொடங்கினர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று ஒரு ஆண் மற்றும் பெண் இருசக்கர வாகனத்தில் வந்து அந்தக் குழந்தையை சாலையோரத்தில் இறக்கிவிட்டு சென்றது கண்டறியப்பட்டது.
அந்த பைக் அவரது மனைவி அம்சாவின் தோழி நேத்ராவுக்குச் சொந்தமானது என்று சக்திவேல் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா மற்றும் அவரது காதலன் திருப்பதியை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
கிடுக்கிப்பிடி விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சமிட்டன. 15ஆம் தேதி அம்சா தனது குழந்தையுடன் பேருந்தில் திருவண்ணாமலைக்கு வந்து, பெரியார் சிலை அருகே இறங்கி, அரசு மருத்துவமனைக்கு செல்ல அவலூர் பேட்டை சாலையில் ரயில்வே கேட் வழியாக நடந்துசென்றுள்ளார்.
அப்போது தனது காதலன் திருப்பதியுடன் ஆட்டோவில் சென்ற நேத்ரா, தனது தோழி அம்சாவை பார்த்து, அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்கச் சங்கிலியை கொள்ளையடிக்கும் திட்டம் தீட்டியுள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று ஏமாற்றி, ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.
அம்சாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வேங்கைக்கால் பகுதியில் உள்ள திருப்பதியின் வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து, அம்சாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, கழுத்திலிருந்த நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர்.
பின்னர் இருவரும் சேர்ந்து, அம்சாவின் சடலத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, பள்ளிக்கொண்டாப்பட்டு அருகே உள்ள கரும்புத் தோப்பில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதற்கிடையில், அம்சாவின் இரண்டு வயது மகன் அழுதுகொண்டிருந்ததால், சம்பவத்தை திசை திருப்பும் நோக்கில் அந்தக் குழந்தையை திண்டிவனம் எஸ்கேபி கல்லூரி அருகே சாலையோரத்தில் விட்டுச் சென்றதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பின்னர், இருவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், கரும்புத் தோப்பில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இருந்த அம்சாவின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
குழந்தை மீட்கப்பட்டு 20 நாட்கள் கடந்த நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதால், இப்போது இந்தக் கொலை வழக்கில் துப்புத் துலங்கியுள்ளது.
தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில், நான்கு சவரன் தங்க நகைக்காக தோழியை கடத்தி கொலை செய்து, அவரின் குழந்தையை சாலையோரத்தில் நிர்கதியாக விட்டுச் சென்ற இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் தங்க நகைகள் அணிந்து தனியாகச் செல்லும் போது, அறிமுகமான நபர்களிடமும் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.








