சென்னை உட்பட தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர கிராமங்கள் சுத்தமாக இல்லை என்று தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டின் கடற்கரை கழிவுகளின் அளவு, அதன் ஆதாரங்கள் மற்றும் மாசுபாடு நிலை தொடர்பான முன்னெடுப்பு அறிக்கையை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில், 13 மாவட்டங்களில் உள்ள 52 கடலோர கிராமங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், 13 கடலோர கிராமங்கள் சுத்தமாக இல்லை என்றும், குறிப்பாக விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி மற்றும் சென்னை ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள கடற்கரை கிராமங்கள் மிகவும் அசுத்தமாக உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, காடத்தூர், நீலாங்கரை, கொட்டிவாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகள் மிகவும் அசுத்தமாக உள்ளன என்றும், பணையூர், பட்டினம்பாக்கம், எண்ணூர், சின்னக்குப்பம் ஆகிய கடற்கரை கிராமப் பகுதிகளும் அசுத்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








