சென்னை அம்பத்தூரில் மருத்துவர் ஹாருல் சமீரா தற்கொலை வழக்கில், வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் மருத்துவர் அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூர் தொழில்பேட்டையில், காதலித்து திருமணம் செய்த மனைவியை வரதட்சனை கோரி துன்புறுத்தி, அவரது உயிரிழப்புக்குக் காரணமான கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆர்டிஓ விசாரணையில், கூடுதல் வரதட்சனை கேட்டு தனது மனைவியை துன்புறுத்தியதாக தெரிய வந்ததால், அதனை அடிப்படையாக கொண்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு முகப்பேர் மேற்கு ரெட்டிபாலத்தைச் சேர்ந்த 29 வயதான மருத்துவர் அசாருதீன், தரமணியில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்தார்.
அவரது மனைவி ஹாருல் சமீராவும் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இருவரும் காதலித்து கடந்த செப்டம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். முகப்பேரில் கணவன்–மனைவி தனியாக வசித்து வந்த நிலையில், 30 சவரன் நகையும் பணமும் வரதட்சனையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் திருமணமான சில நாட்களிலேயே, கூடுதல் வரதட்சனை கேட்டு ஹாருல் சமீராவை அவரது கணவர் அசாருதீன் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறிய நிலையில், வழக்கம்போல் அசாருதீன் பணிக்கு சென்றபோது, கடும் மன உளைச்சலில் இருந்த ஹாருல் சமீரா வீட்டில் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து ஹாருல் சமீராவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழில்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருமணம் செய்து ஒரு வருடம் ஆகாததால் ஆர்டிஓ விசாரணையும் நடந்தது. திருமங்கலம் ஆர்டிஓ விசாரணையில், அசாருதீன் தனது மனைவியிடம் வரதட்சனை கேட்டு கடுமையாக துன்புறுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அம்பத்தூர் தொழில்பேட்டை காவல்துறைக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்று அசாருதீன் கைது செய்யப்பட்டார். அவரை விசாரித்தபின் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
30 சவரன் நகை கொடுத்தும் திருப்தியில்லாமல், கூடுதலாக வீடு வாங்கவேண்டும் என்று கணவன் மனைவியைத் துன்புறுத்தியதும், மேல்படிப்பை தொடர வேண்டும் என்ற ஆசையையும் நிறைவேற்றாமல் அவளை அடக்குமுறைக்கு உட்படுத்தியதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.








