Home தமிழகம் “கிருஷ்ணகிரியின் சென்னானூரில் கற்காலக் கண்டுபிடிப்பு – வரலாற்றை மாற்றும் ஆதாரம்”

“கிருஷ்ணகிரியின் சென்னானூரில் கற்காலக் கண்டுபிடிப்பு – வரலாற்றை மாற்றும் ஆதாரம்”

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட கற்கால பொருட்கள் கிமு 8450 ஆம் ஆண்டுக்கு முந்தையவை என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சென்னனூரில் மக்கள் வாழ்ந்திருப்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னானூர் கிராமத்தில் பழங்கால பொருட்கள் கிடைத்ததை அடுத்து தொல்லியல் துறை அகழாய்வு பணியை கடந்த ஆண்டு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஓராண்டாக நடைபெற்று வந்த அகழ் ஆய்வு பணியில் தொல்பொருள் வல்லுனர்கள் கற்காலத்தை சேர்ந்த ஆயுதங்கள் மட்பாண்டங்கள் உள்ளிட்ட பொருட்களை கண்டுபிடித்தனர்.

இவற்றின் காலத்தை அறியும் வகையில் பொருட்களின் மாதிரிகள் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தின் தொல்லியல் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன.

அங்கு மேற்கொள்ளப்பட்ட நவீன டேட்டிங் ஆய்வுகளின் முடிவில் சென்னானூர் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கிமு 8450 ஆண்டுக்கு முந்தையவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 10ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மக்கள் வசித்திருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக மாநில தொல்பொருள் துறையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர் பேராசிரியர் கே. ராஜன் கூறியுள்ளார்.

இந்த ஆய்வின் முடிவு வேட்டையாடுபவர்களாக இருந்து விவசாய சமூகங்களாக மக்கள் பரிணமித்த வரலாற்றினை அறிவியல் பூர்வமாக கண்டறிய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.