திருவாரூர் அருகே, இயற்கை முறையில் பூச்சி விரட்டி தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி அளித்தனர்.
கீழ்வேளூர் வேளாண் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தோட்டம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுக்கு, இயற்கை முறையில் பஞ்சகவ்யா தயாரிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
சம்பா பயிர்களில் இலைநோய், யானைக்கொம்பன், தண்டு துளைப்பான் உள்ளிட்ட நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதல்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்த பூச்சி விரட்டிகள் தயாரிப்பது குறித்து மாணவிகள் விளக்கமளித்தனர்.
மாணவிகள் செய்து காட்டிய செயல்முறை விளக்கம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், வரும் காலங்களில் அதை நடைமுறையில் பயன்படுத்துவோம் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது:
“கோட்டூர் தோட்டம் பகுதியில் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா மற்றும் தசகவ்யா தயாரிப்பு முறைகள், அவற்றின் பயன்கள் மற்றும் வயல்களில் எவ்வாறு தெளிக்க வேண்டும் என்பதைக் குறித்து விளக்கினோம்.
வயலில் இறங்கி, எந்தெந்த பூச்சி மற்றும் நோய் தாக்குதல் உள்ளன என்பதை கண்டறிந்து, இவ்வகை இயற்கை முறைகளை பயன்படுத்தினால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என விவசாயிகளிடம் தெரிவித்தோம். இதன் மூலம் அவர்கள் பயனடைவார்கள் என நாங்கள் நம்புகிறோம்” என்றனர்.








