சென்னையில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்றக் கூட்டம் தற்போது மேயர் பிரியா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
அதில் முக்கியமான தீர்மானமாக, சென்னை மாநகராட்சி வரம்புக்குள் உள்ள வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர், மாநகராட்சியிடமிருந்து செல்லப்பிராணி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உரிமம் பெறாதவர்களுக்கு ₹5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், பொதுஇடங்களில் செல்லப்பிராணிகள் கழிவு ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், செல்லப்பிராணிகளை பொது இடங்களில் அழைத்துச் செல்லும் போது கழுத்துப் பட்டை (leash) இன்றி அழைத்துச் சென்றால் உரிமையாளருக்கு ₹500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், செல்லப்பிராணிகள் பொதுஇடங்களில் கழிவு செய்தால், அதை சுத்தம் செய்வது உரிமையாளரின் கடமை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் நவம்பர் 24ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஏற்கனவே, செல்லப்பிராணிகளை வளர்ப்போர் உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தது. இருப்பினும், பலர் அந்த விதியை பின்பற்றாமல் இருந்தனர்.
உரிமம் பெற்றவர்களும் அதை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்காமல் விட்டதைக் கண்டதையடுத்து, தற்போது புதிய அபராதத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.








