கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில், அந்த மாணவியை நீதிபதி தற்போது சந்தித்திருக்கிறார்.
கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில், மூன்று பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், அந்த மூன்று பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஒருவர், அதாவது குற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் பிடிபட்ட மூவரையும் போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
இதனால், அந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்றைய தினம், அவர்கள் பொதுவாடுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர்களை நீதிபதி நேரில் பார்த்து விசாரணை நடத்தி முடித்துள்ளார்.
அவர்களை வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மூவரையும் சந்தித்து விசாரணை முடித்த பிறகு, மாணவியையும் சந்தித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்துவிட்டு, நீதிபதி தற்போது அரசு மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று காலை ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது நீதிபதி விசாரணையும் தொடங்கியுள்ளது.
14 நாட்கள் வரை, அவர்களை அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள சிறை பிரிவிலேயே வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு உடல் நலம் குறைவுபட்டோர், காயமடைந்தோர் போன்றவர்கள் வைக்கப்படுவர். அந்த சிறை பிரிவில், சிறை பிரிவு போலீசார் மூவரையும் கண்காணிப்பார்கள்.
இதைத்தொடர்ந்து, அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். அதற்காக நீதிமன்றத்தில் மனு அளித்து, அடுத்த கட்டமாக விசாரணை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்-II நடுவர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரகுமான் அவர்கள், பாதிக்கப்பட்ட மாணவியையும், கைது செய்யப்பட்ட மூவரையும் நேரில் சந்தித்து, அவர்களை 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு சென்றுள்ளார்.








