ஆதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கட்சியில் சேரும் நிலையில், அவருக்கு எந்த பதவி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துகொண்டிருந்த சூழலில், தற்போது “மாநில அமைப்பு பொதுச் செயலாளர்” எனும் புதிய பதவி உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செங்கோட்டையன் கட்சியில் இணைந்தால் இந்த புதிய மாநில அமைப்பு பொதுச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஒரு வாரமாகவே தமிழக வெற்றி கழகம் மற்றும் செங்கோட்டையன் தரப்பில் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், அது 99% முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி கட்டமாக அவருக்கு பொறுப்பு ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையே தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைத்திருந்தார். கட்சியின் முக்கிய முடிவுகள் இந்த நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த குழுவில் பொதுச் செயலாளர் உட்பட 28 பேர் உள்ளனர்.
இந்த நிர்வாகக் குழுவை ஒருங்கிணைக்கும் முக்கிய பொறுப்பும் செங்கோட்டையனுக்கு வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, செங்கோட்டையன் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வாய்ப்பு அதிகம் எனவும், அதற்காகவே மாநில அமைப்பு பொதுச் செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.








